Tuesday, 21 February 2012

நகரத்தார் 9 கோயில்கள்

  1. இளையாத்தன்குடி
  2. மாத்தூர்
  3. வைரவன்கோயில்
  4. நெமங்கோயில்
  5. இலுப்பைக்குடி
  6. சூரக்குடி
  7. வேலங்குடி
  8. பிள்ளையார்பட்டி 
  9. இரணிகோயில் 
இக்கோயிற்களுள் சிலவற்றில் உட்பிரிவுகள் உண்டு. அவை,
  • இளையாத்தன்குடி: கழனி வாசர்க்குடையர், கின்கினிக்கூருடையர், ஓக்குருடையர், பட்டனச்சாமியர், பெருசெந்துருடையர், சிறுசெந்துருடையர், பெருமருதுருடையர்.
  • மாத்துர்: அரும்பக்கூர், கண்ணுர், கருப்பூர், குளத்துர், மண்ணுர், மணலுர், உறையுர்.
  • வைரவன்கோயில்: கழனி வாசர்க்குடையர், மருதென்திரபுரம், பெரிய வகுப்பு, பிள்ளையார் வகுப்பு, தெய்யானர் வகுப்பு.




இளையாத்தன்குடி. 

மிகவும் பழமைவாய்ந்த இக்கோயில் பாண்டிய மன்னரால் கி.பி. 707இல் கட்டப்பெற்றதாக சாசனங்கள் தெரிவிக்கின்றன. தேவர்கள் அசுரர்களுக்குப் பயந்து இந்த தலத்தில் நல்ல நிம்மதி கிடைக்கவே இங்கு மணலால் சிவலிங்கம் செய்து வழிபட்டனர். சிவன் அருளால் பைரவர் தோன்றி அரக்கர்களை அழித்து தேவர்கட்கு நிம்மதியைக் கொடுத்தால் அதாவது தேவர்களின் இளைப்பை ஆற்றினதால் இவ்வூருக்கு இளையாற்றங்குடி என்ற பெயர் வழங்கலாயிற்று. முதன் முதலில் இந்தக் கோவிலைத்தான் நகரத்தார்கள் எல்லாரும் வழிபட்டனர். நாளடைவில் அவை ஒன்பது பிரிவாக ஆகி ஒன்பது ஊர்களில் தனித் தனி கோவிலாக வழிபட ஆரம்பித்தனர் சுவாமியின் திருநாமம் - கயிலாச நாதர் விநாயகர் கயிலாயவிநாயகர். தனியாக பெரிய சந்நிதி தாயார் நித்ய கல்யாணி. உள்ளே கர்பகிரஹத்தில் அழகான லிங்கத்திருமேனியில் அருள் பாலிக்கிறார் கயிலாயநாதர். வெளி கோஷ்டங்களில் நர்த்தன விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், முருகன் வள்ளி தெய்வானை பிரம்மா என சிலாரூபங்கள் தனித்தனி சந்நிதியில் உள்ளன. அழகான கொடுங்கை வேலைப்பாடுகள் உள்ளன. வெளிப் பிராகாரத்தில்சிறிய சந்நிதியில் தனியாக சுவாமி அரசமங்களேஸ்வதர் மற்றும் மங்களா தேவியும் பிரதிஷ்டையாகி இருக்கிறார்கள். ஒரு சமயம் தஞ்சையில் இக்கோவிலுக்கான வயலில் உழுதபோது பூமியில் அடியிலிருந்து இந்த லிங்கம் கிடைத்ததாம். அந்த லிங்கத்தினை இங்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள் மற்றும் செப்புத் திருமேனியாக உற்சவ மூர்த்தங்கள் பளபள என கண்ணைப் பறிக்கும் பொலிவுடன் காணப்படுகின்றன. கோவில் எதிரே அழகிய குளம் படிக்கட்டுகளுடன் ஸ்படிகம் போன்ற சுத்தமான நீர் ஊற்றுடன் உள்ளது. இக்கோவில் நகரத்தார் பிரிவு ஏழு பிரிவுகள். அவை: கழறிவாசற்குடையார், கிங்கிணி உடையார், ஒக்குரு உடையார் பட்டணத்து சுவாமி, பெருச் செற்றூருடையார், சிறு செற்றூருடையார் ஆகியவை. இதில் பட்டணத்து சுவாமிக்கு என தனிக் கோயில் பக்கத்திலேயே எழுப்பப்பட்டுள்ளது. இக்கோயில் காரைக்குடியிலிருந்து 25 கி.மீ தொலைவு. 


மாத்தூர் கோவில்

 காரைக்குடியிலிருந்து ஐந்து கி.மீ தொலைவு உள்ளது. 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. கி.பி 185ல் கட்டப்பட்டதாக சரித்திரச் சான்றுகள் தெரிவிக்கின்றன. ஐந்து நிலைகள் கொண்ட நெடுங்கோபுரம். இதன் உயரம் 20.50 மீட்டர் எனக் கணக்கிட்டுள்ளார்கள் மேல்தள பரப்பளவு சுமார் 33சதுர அடிகளாம்! உள்ளே நுழைந்தவுடன் கொடி மரத்தருகே நந்தியெம்பெருமான் சிம்ம பீடத்தில் அமர்ந்திருப்பது எங்குமே காணமுடியாத ஒன்று. ஸ்தல விருட்சம் மகிழமரம். இந்த மரத்தடியில் முனீஸ்வர பீடம் ஒன்று உள்ளது. அம்பாள் சந்நிதியில் அருகில் வாராஹி சிம்மபீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறாள். ஸ்வாமியின் திருநாமம் அதோதீஸ்வரர். அம்பாள் - பெரிய நாயகி. கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி தலையில் கிரீட்த்துடன் காண்பது அரிய காட்சியாகும். இங்குள்ள நந்தியெம் பெருமானுக்கு மாப்பிள்ளை அலங்காரம் செய்வதாக நேர்ந்து கொண்டால் தடைப்பட்ட திருமணம் உடனே நடக்கும் என நம்பிக்கை. பல்லாயிர வருடங்களுக்கு முன் இறந்த கொங்கணச்சித்தர் தவமியற்றி வந்தார். அவர் ரஸவாதக் கலையை கற்றதால் பித்தளை, செம்பு, இரும்பு போன்ற உலோகங்களை மூலிகைச் சாற்றினால் தங்கமாக மாற்றும் விதத்தை அறிந்திருந்தார். விடா முயற்சியாக நல்ல மாத்து தங்கம், அதாவது இந்தக் காலத்து வழக்கில் (916,ஙிமிஷி ஹால்மார்க் குவாலிட்டி) தங்கமாகத் தயாரிக்க வேண்டும் என விடாமுயற்சியாக, மேலும் பல பச்சிலை மூலிகைகள் பயன்படுத்தி காயம் செய்து உலோகங்களில் கலந்து நல்ல பொன்னாக ஐநூற்று மாத்துப் பொன்தான் செய்ய முடிந்தது. இதனை செய்தவுடன் கொங்கணருக்குக் களைப்பு ஏற்பட்டு தாகம் ஏற்பட்டது. வெளியே வந்து தண்ணீர், தண்ணீர் எனக் கூவியுள்ளார். அவரைச் சோதிக்க இறைவன் மனித உருவில் வந்து தண்ணீர் தந்தார். அவர் தண்ணீர் அருந்தும் போது, தங்கக்கலசம், தயாரித்த மூலிகைச் சாறு எல்லாவற்றையும் காலால் தள்ளி விட்டு மறைந்து விட்டார். எல்லாம் இறைவன் செயல் என உணர்ந்த கொங்கணர் தங்கம் செய்வதை நிறுத்தி விட்டு தவமியற்றத் தொடங்கினார். ஐநூறு மாற்றுத் தங்கம் தயாரித்த இடம் ஆனதால் இந்த ஊருக்கு மாத்தூர் என பெயர் வழங்கலாயிற்று. சுவாமிக்கு ஐநூற்றீஸ்வரர் என்ற திரு நாமமும் உண்டு. பைரவருக்கு தனிச் சந்நிதி மற்றும் சிறப்பு வழிபாடுகள் உண்டு. நல்ல கலையம்சம் கொண்ட சிலா ரூபம். பிரம்மோற்சவம் நடைபெற்ற ஒரே கோவில் மாத்தூர் தான் மாதாந்திர விசேஷ பூசை, நித்ய பூசைகள் நடைபெறுகின்றன. மாசிமாதத்தில் திருவிழா நடைபெறுகின்றது. கோயில் எதிரே அழகிய ஊறுணி (குளம்) படித்துறையுடன் கூடி நன்கு பராமரிக்கப்பட்ட அழகிய திருக்குளம். கமலாலய தீர்த்தம். முனீஸ்வரருக்கு தனிக் கோவில் இல்லாமல் கோவிலினுள்ளேயே சந்நிதி. இங்கு சாதி சமய வேறுபாடு இன்றி மற்றவர்களும் வந்து முனீஸ்வரரை வழிபட்டுச் செல்கின்றனராம். கோவிலைச் சுற்றி சுவரில் கொடுங்கை வளைவுகள். சிம்மம் வாய்திறந்து இருப்பது போன்றுள்ள சிற்பங்கள். அதன் வாயினுள் உருளும் ஒரு கல்லுருண்டை. இப்படி வியக்க வைக்கும் சிற்பங்களைக் கண்டுவிட்டு போவதற்கு மனமில்லாமல் அடுத்த கோயிலுக்கு புறப்பட்டோம்.


வயிரவன் பட்டி 

இக்கோவில் காரைக்குடியிலிருந்து 15 கி.மீ தொலைவு உள்ளது. சுவாமியின் பெயர் வளர்ஒளிநாதர்: அம்பாள் - வடிவுடைநாயகியம்மை. இதன் பிரிவுகள் ஆறு கழநிவாசற்குடையார் மருத்தென்றின்புரம், பெரியவகுப்பு, பிள்ளையார் வகுப்பு, தெய்வநார் வகுப்பு, இசை குடிமானம் ஆகியவையாகும். ஊரின் பழய பெயர் வீர பாண்டியபுரம், வடுகநாதபுரம், வயிரமாபுரம். ஆகும். இங்கு வயிரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
அசுரர்கள் தேவர்களைத் துன்புறுத்தியபோது தேவர்கள் அஞ்சி சிவனை வேண்ட "அஞ்சற்க" என அசரீரி வாக்காய் உரைத்து “பூலோகத்தில் ஒரு குறிப்பிட்ட வனமாம் கோலவனம் உண்டு. புனிதமான அந்த இடத்திற்குச் சென்றால் துயரம் நீங்கும்” என்றார். தேவர்கள் உடனே புடை சூழ பூமிக்கு வந்தனர். அந்தக் குறிப்பிட்ட வனத்திற்கும் வந்தனர். அங்கு எம்பெருமான் வளளொளிநாதரும் அம்மை வடிவுடைநாயகியும் கோயிலில் அருள் பாலித்துக் கொண்டு இருப்பதைக் கண்டு ஆனந்தம் அடைந்தனர். அவர்களை தரிசித்த உடனே அவர்கள் துயர் நீங்கியது. திருவண்ணாமலையில் அடிமுடி காண, பிரமனுக்கும் திருமாலுக்கும் தீப் பிழம்பாகக் காட்சி கொடுத்த வளர ஒளியே இந்த வளர் ஒளிநாதர் என்பதனை உணர்ந்தனர். அவரே சிவமூர்த்தத்தின் அவதாரமான வயிரவரும் ஆவார். வயிரவருக்கு தனிச் சந்நிதி. தாமரைப் பீடத்தில் நின்ற திருக்கோலம். திகம்பராராகக் காட்சி தருகிறார். நான்கு கைகளில் சூலம், கபாலம், டமருகம், மற்றும் நாகாபாசத்துடன் அருள் பாலிக்கிறார். இவர் சந்நிதி அருகில் வள்ளியம்மை என்ற பெண்ணின் சிலையும் உள்ளது. இவர் வயிரவருக்குத் தொண்டு செய்து இங்கேயே தங்கிவிட்டார்களாம். அதன் நினைவாக சிலை வடித்து உள்ளனர். அவருக்கும் பூசை நடைபெறுகிறது. காசிக்கு சமமான தலம். எப்படி காசியில் இறந்தால் முக்தியோ அதுபோல வயிரவன் கோவிலில் உயிர் நீத்தவர்களைக் கயிலாலயத்திற்கு அனுப்பி விடுவாராம் வயிரவர். ஸ்தல விருட்சம் ஏறழின்சி மரம். இதன் விசேஷம் என்னவென்றால் இந்த மரத்தின் விதையானது பூமியில் விழுந்து முளைக்கும் போது இந்த மரத்தின் வேரானது முளைத்த செடியை தன் பால் இழுத்து விடும் அபூர்வமான ஒன்று. இது போல் படப்பையில் உள்ள ஒரு பழைய சிவன் கோவில் இந்த மரம் ஸ்தல விருட்சமாக உள்ளது. கோயிலின் எதிரே பெரிய அழகிய திருக்குளம். சுத்தமாக பராமரிக்கப்படுகிறது.
கோயில் கோஷ்டங்களில் அழகிய சிற்பக்கலை நயத்துடன கூடிய மண்டபங்களில் தக்ஷிணாமூர்த்தி லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், பிரம்மா ஆகிய சிவரூபங்கள் உள்ளன. தஷிணாமூர்த்தி அமர்ந்து இருக்கும் மண்டபத்தின் இரு தூண்களைத் தட்டினால் ஸப்தங்கள் (நாதங்கள்) கேட்கிறது. வடக்குப் பிராகாரத்தில் இராமர் ஆஞ்சனேயரை வணங்கியபடி நிற்கும் சிவாரூபம் அபூர்வமான ஒன்று சீதை, இலக்குவன், பரதன் உயிர்களை தருணத்தில் காத்ததால் இராமர் நட்புடனும் நன்றியுடனும் ஆஞ்சனேய சுவாமியை வணங்கிய வண்ணம் இருக்கிறாராம். காஞ்சி வரதராஜ ஸ்வாமி கோயிலில் உள்ளது போல் இங்கும் தரையில் சுவரின் அடியில் இரு பல்லிகள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. அதனைத் தொட்டு வழிபட்டால் பல்லி தோஷ நிவர்த்தி உண்டு. கோவிலின் வெளியே வடக்குப் பக்கம் முப்பிலி கறுப்பர் கோவில் உள்ளது. இவரை பெண்கள் ஜன்னல் வழியாகத்தான் தரிசிக்க வேண்டும். பிறகு முன்னால் உள்ள சூலத்தை வணங்கிவிட்டுச் செல்கின்றனர். வயிரவர் கோவிலின் மேற் கூரையில் ஓவியங்கள் கண்ணைப் பறிக்கின்றன. எல்லாமே மூலிகைச் சாறு கொண்டு தீட்டப்பட்டவை. தேர் திருநாள் என விசேஷங்கள் கொண்டாப்படுகின்றன. வயிரவரைத் தொழுது விட்டு அடுத்த கோயிலுக்குச் சென்றோம்.


நேமங்கோயில்

காரைக்குடியிலிருந்து ஐந்து கிமீ தொலைவில் உள்ளது. ஐந்து நிலைகள் கொண்ட அழகிய பெரிய கோபுரம். நுழைய வாயிலில் வருடக் கணக்காக அடை அடையாய் தேன் கூடுகள் உள்ளன. தேனீக்கள் வரும் பக்தர்களை. கொட்டுவதில்லை என்று கூறுகிறார்கள். கோயிலுக்கு எதிரே அழகான சுத்தமான ஊருணி.(குளம்) படித்துறையுடன் உள்ளது.
அதாவது இறைபணிகள் விஷயத்தில் நியம, நிஷ்டை வேண்டும் என்பார்கள் அல்லவா? அதுபோல் நியமம் என்ற சொல்மருவி நேமம் ஆகியிருக்கலாம். மற்றொரு கர்ணபரம்பரைச் செய்தி என்னவென்றால் முன் காலத்தில் நேமன், கண்டன், உதயன், செய்தான் ஆகியோரின் கோட்டைகள் இங்கு இருந்ததால் நேமன் கோட்டை என்றும் கூறுவார்களாம். நேமன் இருந்த ஊர் கோயில் என்றதால் நேமக் கோயில் என்று வழங்கலாயிற்று. இக்கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. கி.பி. 714ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக வரலாற்றில் தெரிகிறது. இந்த ஊருக்கு நந்திபுரம், மதுநதிபுரம், செயங்கொண்ட சோழபுரம், எனப் பல பெயர்கள் உண்டு.சுவாமியின் திருநாமம் - நேமநாதர். அம்பாள் - சௌந்தரநாயகி. விநாயகர் - மாணிக்கவிநாயகர், ஜெயங்கொண்ட விநாயகர். முருகக் கடவுளின் திருநாமம் கிருலாந்தக மூர்த்தி, சுப்பிரமணியர். ஜெயங்கொண்ட சோழ அரசரால் கட்டுவிக்கப்பட்ட ஆலயம். ஆனால் சுவாமிக்கும் ஜெயங்கொண்ட சோழீசர் என்ற திருநாமமும் உண்டு. இந்தக் கோயில் ஐந்து நிலைகள் கொண்ட கோபுரத்தினை உடையது. உள்ளே நுழைந்தால் "கல்லிலே கலைவண்ணம் கண்டான்" என்ற சொற்கள் தான் நினைவிற்கு வரும். பிள்ளையார் பலவித கோலங்களில் நின்ற திருக்கோலம் நடன கணபதி, வல்லப கணபதி, தசபுஜ கணபதியாக பத்துக்கரங்களிலும் ஆயுதம் ஏந்தி பல ரூபங்களில் அருள் பாலிக்கிறார். முருகனும் அதே போல் ஆறுமுகங்களுடனும் பன்னிரு தோளுடனும் கைகளில் பல ஆயுதங்களோடு அருள் பாலிக்கிறார். அவரருகில் சிவன் சதுர்புஜங்களுடன் ஆயுதத்துடன் காட்சி தருகிறார். மற்றும் சுற்றுப் பிரகாரங்களில் சூரியன் சந்திரன் தனித்தனி சந்நிதிகள். பைரவருக்குத் தனி சந்நிதி இரு நாய் வாகனத்துடன் அருள் பாலிக்கிறார். வடக்குப் பிராகாரத்தில் ஆடலரசனின் அற்புத சிலாவடிவம் மூலஸ்தானத்தில் கர்பகிரஹத்தில் ஜெயங்கொண்ட சோழீசர் வட்ட வடிவ ஆவுடையின்மேல் அழகிய லிங்கத் திருமேனி. அன்னை சௌந்தரநாயகி கமல பீடத்தில் நின்ற திருக்கோலம் இத்தலத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இங்கு காளி நேமங்காளி என்ற பெயர் கொண்டு அரூபமாக அருள் பாலிக்கிறாள். இவள் ஆயுதங்கள் சூலம், ஈட்டி, அறிவாள், ஆகியவற்றை நாம் காணலாம் இந்தப் பகுதியில் உச்சிநேரத்திலும், இரவிலும் சிறுமியர், பெண்கள் போவதில்லையாம்.


இலுப்பைக் குடி 

இத்தலம் காரைக்குடியிலிருந்து ஐந்து கி.மீ தொலைவில் உள்ளது. இலுப்பைக் காடாக ஒரு காலத்தில் இந்த இடம் இருந்ததால் இந்தப் பெயர் என்று கூறுகிறார்கள். கி.பி 714இல் பாண்டிய மன்னர், இக்கோயில் நகரத்தார்க்குக் கொடுக்கப்பட்டது. சிவ பெருமானே நகரத்தார் ஒருவரின் கனவில் அவருக்கு சூடாமணி ஒன்றைத் தந்து சிவ வழிபாடு செய்யப் பணித்தாராம். இந்நிகழ்வினை இலுப்பைக்குடி புராணம் தெரிவிக்கிறது. வீரபாண்டிபுரம், சூடாமணிபுரம், நால்வேதபுரம் ஆகிய பெயர்களும் உண்டாம்.
இறைவன் - சுவயம்பிரகாசர், தான் தோன்றீஸ்வரர்.
அம்பாள் - சௌந்தர நாயகி. பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் உண்டு. பிரம்மா பூஜை செய்த இடம். கோயிலின் எதிரே அழகிய குளம் பிரம்ம தீர்த்தம். நான்கு வேதங்களும் பூசித்த தலம். சுவாமி சிறிய மூர்த்தம். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பது கோவிலைப் பார்த்தாலே தெரிகிறது. அம்மன் சௌந்தர நாயகி நின்ற திருக்கோலம். இதில் மற்றொரு விசேஷம் அம்பாள் பின்னால் திருவாசியும் கல்லினால் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகும். பைரவர் தனிச் சந்நிதியில் உள்ளார். இரு திசைகளிலும் முகத்தைத் திருப்பிய வண்ணம் இரண்டு நாய்கள் வாகனத்துடன் காட்சி தருகிறார். இந்த பைரவர் சந்நிதியின் வெளிப்புறம் சிறு கூடுகள் போன்ற அமைப்பில் பதினைந்து விதமான வடிவங்களில் பைரவர் காணப்படுகிறார். இது போல் எங்கும் காணக் கிடைக்காது.
தான் தோன்றீசர்  தோன்றிய வரலாறு: கொங்கணச் சித்தருக்கு மாத்துக்கு ஐநூறு மாத்துக்கு தங்கம் செய்தார் இல்லையா? அவருக்கு மேலும் ஆயிரம் மாற்றுக்குத் தங்கம் செய்ய வேண்டும் என்ற ஆசை எழுந்தது. இதனை அறிந்த சிவபெருமான் அவரை இலுப்பைக் காட்டுக்கு வரச் சொல்லிப் பணித்தார். அங்கு வந்த கொங்கணரிடம், “கொங்கணா! என்னைப் பார்” என்று கூற, கொங்கணரும் சிவபிரானைப் பார்க்க அப்போது கண்ணைப் பறிக்கும் ஒளிப் பிழம்பு லிங்கத் திருமேனியில் தோன்றியது. “இந்த சுயம்பிரகாசரைக் காண்பதை விட்டு தங்கத்தின் மீது ஆசை வைத்தேனே” என கொங்கணர் தங்கம் மீதான ஆசையை அறுத்தெறிந்தார். உடனே சிவன் காலில் விழுந்து வணங்கி அந்த ஜோதியோடு ஐக்கியமாகி விட்டார். ரொம்ப வருடங்களுக்கு முன் கொங்கணரின் ஐம்பொன் சிலை ஒன்று இங்கு பூமியில் கிடைத்ததாம். தற்போது உற்சவ மூர்த்தங்களுடன் வைக்கப்பட்டுள்ளது. கோவில் அர்த்த மண்டபத் தூணில் ஒரு சதுர வடிவத்தில் பல பூக்கள் மலர்ந்துள்ளது போல சிற்பம் கமலம் போன்று காணப்படுகின்றது. அதன் மையப் பகுதியில் இரு விரற்கிடை அளவான சிறு விநாயகர் உருவம் அவ்வளவு அழகு. இங்கு தக்ஷிணாமூர்த்தி வீணா தக்ஷிணாமூர்த்தியாக அருள் பாலிக்கிறார். பிராகாரங்களில் கொடுங்கைகள் சிம்ம சிற்பங்கள் வலம்வர பெரிய பிராகாரங்கள் உள்ளன.


சூரக்குடி 

காரைக்குடியிலிருந்து பத்து கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம். சூரை மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இவ்வூருக்கு இப்பெயர் வழங்கலாயிற்று. மிகவும் பழைமை வாய்ந்த கோவில். நான்கு நிலைகள் கூடிய சிறிய கோபுரமாக இருந்தாலும் சிற்பங்களுடன் அழகாக இருக்கிறது. கோவிலின் எதிரே அழகான ஊருணி (குளம்) படிக்கட்டுளுடன் உள்ளது. சுவாமியின் திருநாமம் - தேசிக நாதர் - அம்பாள் - ஆவுடைநாயகி. பைரவர் விசேஷம். கோயில் ஸ்தல விருட்சம் - மாமரம். கோபுரத்திற்கு முன் 16 கால் மண்டபம், காணப்படுகின்றது, அதன் தூண்களில் பல சிற்பங்கள் அழகாக இருக்கின்றன. இந்த மண்டபத்தில் விழாக் காலங்களில் உற்சவ மூர்த்தங்களுக்கும், பஞ்ச மூர்த்தங்களுக்கும் அலங்காரம் செய்வார்களாம்.
கோவிலினுள்ளே போனால் பெரிய பிராகாரங்கள், உள்ளே கர்பக்ரஹத்தில் லிங்கமூர்த்தியாக தேசிகநாதர் அருள் பாலிக்கிறார். கிழக்கு பார்த்த சந்நிதி. லிங்கத்தின் மீது ப்ரும்ம ரேகைகள் காணப்படுவதாகக் கூறினார்கள். அலங்காரம் செய்திருந்தார்கள். இக்கோயிலுக்கு உள்ள நகரத்தார்கள் கடல் வாணிபம் செய்த சுமார் ஆயிர்த்து ஐநூறு பேரும் இந்த இறைவனின் பெயரே அடை மொழியாக தாநா தேசிகர் என்ற திருநாமத்துடன் உள்ளார்கள். கோஷ்டத்தில் ‘தக்ஷிணாமூர்த்தி சந்நிதியை இரு சிம்மங்கள் தாங்கியவாறு வடிக்கப்பட்டுள்ளது. அவர் அமர்ந்திருக்கும் கல்லால மரம், அதன் கிளைகள், அதிலுள்ள இலைகள், மலர்கள் என எல்லாப் பகுதிகளுமே ஒரே கல்லில் செதுக்கப்பட்டவையாகும். தக்ஷிணாமூர்த்தியும் முதுகுப்புறமும், மரமும் ஒட்டாது தனியே இடைவெளிவிட்டு இருப்பது சிற்பக்கலைக்கு ஓர் எடுத்துக்காட்டு. மற்றும் உள்ள பிராகாரங்களில் லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், முருகன் தனிச் சந்நிதிகளில் உள்ளனர். அம்பாள் ஆவுடைநாயகி தனிச் சந்நிதியில் நின்ற திருக்கோலம். சுவாமி எதிரே நந்தியெம்பெருமானும் நான்கு சிம்மங்கள் தாங்கும் பீடத்தில் இருப்பது விசேஷம். மண்டபத்திற்கு மேலே கல்லில் வளையங்கள் போல் செதுக்கி சங்கிலி போல் கோத்த அமைப்பு அழகாக உள்ளது. பைரவருக்கு தென் பகுதியில் தனிச் சந்நிதி. பலநூறு வருடங்கள் பழைமை வாய்ந்த இந்த ஆலயத்துக்கு, சமீப காலத்தில் குடமுழுக்கு நடைபெற்றதாகவும் அப்போது அங்குள்ள மகளிர் அணியினால் 63 நாயன்மார்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. நல்ல பணி, உடல் ஊனம், காது கேளாமை போன்ற குறைகளுக்கு, இக்கோயிலில் வழிபாடு நடத்தினால் அக்குறை நீங்கி சுகமாகிவிடுகிறது.


வேலங்குடி 

காரைக்குடியிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. வேல மரங்கள் அதிகமாக உள்ளதால் இந்த ஊருக்கு இப்பெயர் வந்ததாகக் கூறுகிறார்கள். கோட்டையூரின் ஒரு பகுதியில் இந்த ஊர் உள்ளது.
சுவாமியின் திருநாமம் கண்டீசர், அம்பாள், காமாட்சி
இக்கோயிலுக்கு அருகிலேயே "சொக்கட்டான் விநாயகர்" என்ற கோயில் உள்ளது. அதாவது "சொல் கேட்டான் விநாயகர்" என்பதன் திரிபே சொக்கட்டான் விநாயகர் என்று மருவிவிட்டது. என்ன சொல் சொல்லி பிரார்த்தனை செய்தாலும் உடனே கேட்டு அதற்குல் பலனளித்து விடும் வரப்பிரசாதி. விநாயகரை வேண்டி பலன் கிடைத்ததும் 108 தேங்காய்கள் உடைக்கப்படுகின்றன. சிலர் அன்னதானம் செய்கின்றனர்.
வேலங்குடி கோவில் முன் புறம் மூன்று நிலைகள் கொண்ட சிறிய கோபுரத்துடன் உள்ளது. எதிரே அழகிய ஊருணி. படிக்கட்டுகளும் கோவிலினுள்ளே கொடிமரம், நந்தி, உள்ளே சுவாமி சண்டீசர் அற்புத தரிசனம், உள் மண்டபமேடையில் தில்லையம்பலவனும் சிவகாமி அம்மையும் செப்புத் திருமேனி. அருகில் மாணிக்கவாசகர். அவருடன் அருகில் யோக தண்டமும் இருக்கிறது. இந்த தண்டத்தின் வரலாறு மிகச் சிறப்பு வாய்ந்தது. நகரத்தார்களுக்கு உபதேசம் கொடுக்கும் குருவுடையதாம் இந்த தண்டம். கிளாமடம் சுவாமிகள் என்பவர், ஆண்களுக்கும், பெண்களுக்கு துலா ஊர் சுவாமிகள் உபதேசம் தருவாராம். ஒரு சமயம் இரு குரு மார்களும் தீர்த்த யாத்திரையாக காசிக்குப் போனபோது அங்கு பல கோயில்களைத் தரிசித்து விட்டு, துலா ஊர் சுவாமிகள் திரும்பிவிட்டார். ஆனால் கிளாமடம் சுவாமிகள் பல வருடங்களாகியும் திரும்பாமல் இருந்ததால் அவர் இயற்கை எய்தி விட்டார் என்ற புரளியும் கிளம்பி விட்டதாம். இதனால் ஆண்களுக்கு யார் உபதேசம் தருவார்கள் எனக் கவலையுற்றனர். பிறகு எல்லாரும் கூடி ஏகமனதாக திருப்புனவாசல் சுவாமியை குருவாக ஏற்று உபதேசம் பெற்றுக் கொண்டனர். கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து கிளாமடம் சுவாமி ஊருக்குத் திரும்ப எல்லாருக்கும் வாய்ப்பு. அவரிடம் நடந்ததைக் கூறுகிறார்கள். இதனால் அவர் மனம் வேதனை அடைந்தது பிறகு “நடந்தது நடந்து விட்டது உபதேசம் கேட்டவர்கள் அப்படியே தொடரட்டும். என்னிடம் கேட்க விரும்பினால் என்னிடம் வரட்டும்” எனக் கூறினாராம். அதனால் தான் இக்கோவில் புள்ளிகள் குறைவு. ஆனால் யோக தண்டத்தை இன்றும் பூசை செய்து வணங்குகிறார்கள்.
அம்பாள் காமாக்ஷிக்கு தனிச் சந்நிதி. கோஷ்டங்களில் தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரும்மா ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். சமயக் குரவர் நால்வருடன் “ஐவராக சேக்கிழாரும் இருக்கிறார். பைரவருக்குத் தனிச் சந்நிதி. நன்றாகப் பராமரிக்கப்படும் கோவில்.



பிள்ளையார் பட்டி 

பிள்ளையார் பட்டி பெருநகரில் வீற்றிருக்கும்
உள்ளுவார் துன்பம் ஒழிக்கின்ற தெள்ளமுதே
என்னருமைக் கற்பகமே என்னுள்ளத் தில் நீ இருக்க
துள்ளுமோ முன்னை வினைச் சொல் 

என்ற பாசுரத்தைக் கூறிய படி அலங்கார வளைவினுள் நுழைகிறோம். எந்நாளும் திருநாள் போல் அலைஅலையாய் மக்கள். கடைகள், அன்னதான சத்திரங்கள், தங்கும் விடுதிகள் என ஊர் கலகல என்று இருக்கிறது. கிழக்கே ஏழுநிலைகள் கொண்டநெடிய கோபுரம். வடக்குத்திசையில் மூன்று நிலைகள் கொண்ட விநாயகர் கோபுரம், அழகிய ஊருணி.
இங்கு மூலாதார மூர்த்தியான கணபதி பிரதானம். மூலஸ்தானக் கருவறையில் இருகரங்களுடன் ஒருகரத்தில் லிங்கத்தினையும், மற்றொரு கையால் இடுப்புக் கச்சையைப் பிடித்தப்படி இருக்கிறார். வலது பக்கம் துதிக்கை சுழன்று உள்ளது.
ஊர் பிள்ளையார்பட்டி என்றே வழங்கப்படுகிறது. பழைய பெயர்களாக எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி என இருந்த போதிலும் பிள்ளையார்பட்டி என்ற பெயரே நிலைத்து வழங்குகிறது. அருணகிரிநாதர் தம் திருப்புகழில் "விநாயகமலை" எனக்குறிப்பிடுகிறார்.
ஆம்! இது ஒரு குடைவரைக் கோயில் தான். மலையைக் குடைந்து கோயில் அமைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலையும் அப்படியே செய்யப்பட்டது. கொண்டுவந்து வைத்தது அல்ல. அதுவும் விநாயகரைவடித்த சிற்பியும் தன் பெயரைக் கையொப்பம் போடுவது போல் செடுக்கி இருப்பது விசேஷம். மலை கஜப்ருஷ்ட விமானம் போல் அமைந்துள்ளது. அப்படி குடையப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிலாரூபத்தையும் மலையைக் குடைந்தே செதுக்கி யுள்ளார்கள். உள்ளே பிள்ளையாரை அடுத்து சிவன் திருவீசர் என்ற திருநாமம் தாங்கி அருள்பாலிக்கிறார். அம்பாள் வாடாமலர் மங்கை. பைரவருக்குத் தனிச் சிறப்பு வழிபாடு. நவகிரஹங்கள் என அழகான தெய்விகச் சூழல். சிற்பங்கள் களையாக உள்ளன. ஒவியங்கள் கண்ணைப் பறிக்கின்றன. பச்சிலைச் சாற்றினால் தீட்டப்பட்ட வண்ண வண்ண ஓவியம். அதிலும் ஒரு விநாயகர் ஓவியம் குறிப்பிடத் தக்கது. நாம் எங்கிருந்து பார்த்தாலும் அவர் கண்கள் நம்மையே பார்ப்பது போன்ற அமைப்பு தத்ரூபம். இக்கோயிலின் வரலாறு வயிரவ புராணத்தில் உள்ளது. இந்திரனையும், தேவர்களையும் அசுரர்களிடமிருந்து காக்க வயிரவன் மார்த்தாண்டவயிரவராக அவதாரம் எடுத்தார். முதலில் நந்தி எம்பெருமானைப் போருக்கு அனுப்பினார். பிறகு கணபதியும் சென்றார். இருவரும் அசுரர்களை எல்லாம் அழித்துவிட ஒருவன் மட்டும் தப்பிவிட்டான் அவனே தமிஷ்ட்ரன் என்ற அசுரன் ஆவான். ஒரு பெரிய மலையைப் பெயர்த்து விநாயகர் படைகள் மீது வீசினான் உடனே விநாயகர் தம் குலிசப் படையை விட்டு “அம்மலையைக் குடைந்து கோயிலாக்குக” என்று பணித்தார். அவ்வாறே அந்த மலைக் கோயிலாயிற்று என்கிறது புராணம்.
  • ஆவணி மாதம் பிள்ளையார் சதுர்த்தி மிகவும் விசேஷம்.
  • குடமுழுக்கு 2002ல் நடத்தப்பட்டது.



இரணியூர்

பெயர்க்காரணம். திருமால் இரண்யகசிபுவை அழிக்க எடுத்த அவதாரமான நரஸிம்ஹ அவதாரம் எல்லாருக்கும் தெரிந்ததே. இரண்யனை அவன் கேட்ட வரங்களுக்கு வழுவாமல் அதற்குத் தக்கபடி அழித்து அவன் வயிற்றைக் கிழித்து குடலை மாலையாக அணிந்த பின்னும் கோபம் அடங்காமல் இருக்கவே சிவபிரான் சரபேஸ்வரன் அவதாரம் எடுத்து திருமாலை ஆட்கொண்டார். இங்கு மற்றொரு விசேஷம் ஒவ்வொரு கடவுளுக்கும் தனித்தனி ஊருணிகள் (குளங்கள்). சிவன் - கல்லூரணி, பெருமாள். பெருமாள் ஊருணி. பத்திரகாளி திருவேட்பூருடையார் ஊருணி
பெரிய ஐந்து நிலைகள் கொண்ட கோபுரம். கோபுரத்தையும், ஈசனையும் ஒரே சேரக் கண்டு வணங்கலாம். அப்படி ஒரு விசேஷ அமைப்பு. சிற்ப வேலைப்பாடுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அவ்வளவு அழகு. கோயில் மேல் உத்திரத்தில் மூலிகைச்சாறு கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள். அம்மன் சந்நிதி முன் நவதுர்க்கைகளும் தூண்களில் அணிவகுத்து நிற்கும் கோலம் அபூர்வக் காட்சியாகும். இது தவிர அஷ்டலக்ஷ்மிகளும் அணிவகுப்பது போல் அழகாக நிற்கிறார்கள். கோஷ்டங்களில் தக்ஷிணாமூர்த்தி பைரவருக்கு தனிச் சந்நிதி. முருகன், வள்ளி, தெய்வானை மூவரும் தனித் தனி மயில் வாகனத்தில் இருப்பது எங்கும் காணமுடியாத ஒன்று. உற்சவ மூர்த்திகள் பைரவருக்கு கார்த்திகை மாதம் 6 நாள்கள் சம்பக ஷஷ்டி விழா எடுத்து வழிபடுகிறார்கள். பைரவர் சந்நிதியை சுற்றி 28 வகை பைரவர் சிலைகள் உள்ளன. வநாயகருக்குத் தனி சந்நிதி. அடடா என்ன கலைத்திறன்! அரசர்களுக்கு ஈடாக கட்டிய பெரிய பெரிய பிராகாரங்களுடன் கூடிய 9 கோயில்களையும் பார்த்தாகி விட்டது. நாம் ஒன்பது நகரத்தார் கோவில்களை தரிசனம் செய்தோம் இல்லையா? ஒன்பதிலும் சிறப்பான சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.



  •  எல்லாக் கோயில்களிலும் ஊருணி சுத்தமாக இருக்கும்.குளம் என்பதனை செட்டிநாட்டு வழக்கில் ஊருணி என்கிறார்கள். இதன் பொருள் ஊருக்கு உண்பதற்காக உள்ள நீர் தான் ஊருணி. அதில்யாரும் குளித்தோ, துவைத்தோ, கைகால் சுத்தம் செய்யவோ கூடாது. அதில் எல்லாரும் கட்டுப்படுகிறார்கள். அதனாலேயே அது சுத்தமாக உள்ளது ஒவ்வொரு கோவிலிலும், இதனை மற்ற எல்லா ஊர்களும் கடைப்பிடித்தால் எவ்வளவு நல்லது

  • அடுத்து உற்சவ சிற்பங்கள் எல்லாமே புதுசு போல் பளபள என்று இருக்கும். ஊருணி மண் எடுத்து காயவைத்து சலித்து தேய்த்து பின் புளி கொண்டு தேய்த்து ஊருணி நீரில் அலம்பிவிடுவார்கள்.

  • எல்லாக் கோயில்களிலும் கொடுங்கைகள், சிற்பங்கள் அன்றுதான் செதுக்கியது போல் புதுப் பொலிவுடன் இருக்கும்,  நல்ல பராமரிப்பு. விளக்குக் கூட கண்ட கண்ட இடங்களில் ஏற்றி எண்ணெய்ப்பிசுக்கு இல்லாமல் ஒரு பெரிய அலுமினிய டிரேயில் மண்நிரப்பி அதில் தீபம் ஏற்றுகின்றனர்.






No comments:

Post a Comment